Monday, April 27, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 11

உன்னுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னை புதியவனாக உணர்கிறேன் .....உனக்காகவே ஒவ்வொரு நொடியையும் வாழ ஆசைப்படுகிறேன் .......

என்னுடைய வாழ்நாள் முழுவதும் உன்னிடமே கழிக்க ஆசைப்படுகிறேன் ....என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என் உயிரே ......

கடவுள் என்முன் தோன்றி வரம் என்ன வேண்டும் என்று கேட்டாரென்றால் இழந்து போன என் இளமையை உன்னுடன் வாழ எனக்குத் திருப்பித்தா என்று கேட்பேன் .....

இப்பொழுதிருக்கும் என் வாழ்க்கையை மறந்து உனக்கான பகுதிகளை மட்டும் நினைவில் வைத்து வாழவே ஆசை என் அன்பே....

கொஞ்சமே கொஞ்சம் என்கையை பிடித்தாய் என்றால் இந்த நிகழ்வுகளை மறந்து உன்னுடனான தொடுதல்களை நினைத்து கொஞ்சம் வலிகளை மறப்பேன் ....

வாழ்கையில் என்னை ஏணியாக்கி உயர்ந்தவர்கள் ஏராளம்...அவர்களை வாழ்த்துகிறேன் .....ஆனால் என் முதுகிற்குப் பின்னால் பேசுகிறார்களே அவர்களை என்னால் மன்னிக்க முடிவதில்லை ......அந்த உயர்ந்தவர்கள் என்னை பொறுத்தவரையில் தாழ்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் .....இருந்துவிட்டு போகட்டும் ....

அவர்களிடமிருந்து ஒதுங்கவே பிரியம் ....ஒதுக்கி விடுகிறேன் .....உன்னை பார்த்தபின்புதான் என்னால் அவர்களை ஒதுக்கமுடிகிறது .....உன் உந்து சக்தியால்தான் அவர்களிடமிருந்து தப்பிக்கிறேன் ....

என் வாழ்நாள் ஆதாரம்உன் அண்மை ,நெருக்கம்,காதல் எல்லாமே ....அது இல்லையென்றால் நான் காய்ந்த இலைஆகி இருப்பேன் .......இந்த காற்றும் என்னை எங்கோ அடித்துச் சென்றிருக்கும் ......

கனவுகளையே நேசிக்கும் எனக்கு நிதர்சனத்தை காட்டியது உன் அன்பும் பாசமும்தான் .....

கசப்பையே குடித்துப் பழகிய எனக்கு உன் காதலும் நெருக்கமும் அமிர்தத்தை கொடுத்தன .....இப்பொழுது அதையே மனது விரும்புகிறது உன் நிழலிலே வாழ விரும்புகிறது...உன்மடியிலே என்னை தொலைத்துக்கொள்ள மனது விரும்புகிறது .....உன் இளம்சூடான மார்பில் என்னைச் சாய்த்துக்கொள்ள மனது விரும்புகிறது ......இவையெல்லாம் வாழ்நாள் முழுவதும் கிடைக்காதா என்று மனது ஏங்குகிறது என் உயிரே ...

என் அழகான மனைவிக்கு அவளின் சின்ன சின்ன ஆசைகளை கிட்டவே இருந்து நிறைவேற்ற ஆசை .....அவளின் உணர்வுகளுக்கு மரியாதை செய்ய ஆசை ...

மனம் கோணாமல் நடந்துகொள்ள ஆசை ......எவ்வளவு ஆசை...எத்தனை ஏக்கங்கள் ....அத்தனையும் உனக்காக செய்யவே ஆசை...

நான் நினைத்தது எல்லாம் அரைகுறையாய் நடந்தது .......உன்னை மட்டும் முழுதாக என்னிடம் வைத்துக்கொள்ள ஆசை என்னுயிரே .......

என்கைப்பிடித்து உன்னுடன் அழைத்துக்கொள் ......உனக்குள்ளே அணைத்துக்கொள்....

உன்வாசதிற்காக ஏங்குகிறது என் இதயம்.....

Friday, April 24, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 10

உன்னிடம் நான் கொண்டிருப்பது எது ? காதலா! இல்லை என் உயிரை இந்த காதல் என்ற வட்டத்தில் அடைத்துவைக்க எனக்கு விருப்பம் இல்லை .....

எல்லாவற்றையும் தாண்டி ......எல்லைகளைக்கடந்து நீ இருந்ததால் தான் நான் உன்னிடம் வந்தேன்

அவ்வாறென்றால் இது அன்பா, பாசமா, பிரேமையா எதுவென்று நான் சொல்வது ?

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு இனம் புரியாத உணர்வு இது...

உன் ஒவ்வொரு உணர்வுகளையும் நேசிக்கிறேன் ....

உன் சின்ன சின்ன ஆசைகளையும் நேசிக்கிறேன் .....

உன் சின்ன சின்ன வருத்தங்களையும் நேசிக்கிறேன் ......

நீ நேசிப்பதை நான் நேசிக்கிறேன் .....

நீ சுவாசிப்பதை நான் நேசிக்கிறேன் .....

மொத்தமாய் உன்னை என்னில் அடக்கிக்கொள்ள விரும்புகிறேன் .......

நான் என்பது நீதானே என் உயிரே .....

Thursday, April 23, 2009

என் உயிருக்கும் ஓர் கடிதம் - 9

உன்னை என்னிடம் சேர்த்ததற்காக அந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.....நானும் உன்னிடம் வந்ததற்காக கொஞ்சமே கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கிறேன் .....அதனால்தான் உன் தோளில் சாய்ந்திருக்கிறேன்......நிம்மதியாய்

இனியும் உனக்காகவே அந்த கடவுளிடம் வேண்ட ஆசை.....உனக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடு என்றுதான் வேண்டுகிறேன்....

புன்னகைப்பூவாய் என்றும் நீ இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.....

நீ சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடிகளில் இருந்தும் இறைவன் உன்னை காப்பற்றட்டும் ...

நான் உனக்காகவே என்னை தேய்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் ....

ஏதோ என்னால் முடிந்தது உனக்கு கொடுக்கவே ஆசைப்படுகிறேன் நீ வேண்டுபவை நிம்மதியாக இருந்தாலும் ......

என்னைப்பற்றி நீ கவலைகொள்ள தேவை இல்லை.....என் வாழ்க்கைப்பயணம் உன்னை நோக்கியே இருக்கும் இருக்கணும்.....அதைத்தான் நானும் வேண்டுகிறேன் .....

அந்திமக்காலத்தில் உன் மடியில் தலை சாயவே விருப்பம்...கண்மூடி தூங்கவேண்டும் மீளாமல் உன்சுகத்துடனேயே சென்றுவிடுகிறேன் ......

எனக்கான இடம் நீதான் என்று நிர்ணயிக்கப்பட்டது இவ்வுலகில்....முடிந்தவரை உன்னை திருப்திப்படுத்தவே ஆசை .....

நீ கண்ணீர் சிந்தாமல் இருக்கவேண்டும் இனியேனும் ......பயம் கொள்ளாமல் இருக்கவேண்டும் இனிமேலும்....

சமுதாயப்பர்வைகளில் நான் உயிரோட்டமாக உனக்கிருக்க விரும்புகிறேன் ....

உனக்கான என் பங்களிப்பு நிச்சயம் நிறைவேறும் நிறைவேற்றிவிட்டுத்தான் செல்வேன்....

நீ எதைக்கேட்டாலும் என்னால் தரமுடியும் உயிர் வேண்டும் என்றாலும் ......

எனக்குத்தேவை நீ எப்போதும் என்பார்வையில் படும்படி நடந்துகொள்ளவேண்டும் ....

அது ஒன்றே போதும் எனக்கு..

நல்லவையோ கெட்டவையோ மனம்திறந்து சொல்லவேண்டும் என்பதே என் ஆசை....

இதோ நீ செல்கிறாய் அடுத்தவாரம் .....ஒருநாள் விடுமுறையாக ......எப்படி அந்த ஒருநாளை எதிர்கொள்ளப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை ........

நீ இல்லாத இடம் எனக்கு வெற்றிடமாகத் தெரிகிறது .......ஒரே சூன்யமாய் .....

வேறொன்றையும் ரசிக்கத்தோன்றவில்லை உன்னைத்தவிர ........

Monday, April 20, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 8

கொஞ்சம் உன்மடியில் படுத்துக்கொள்கிறேன்
எனக்குத்தேவை உன் ஆறுதல் கண்ணம்மா....
எங்கே உன்மடிக்குள் அடைக்கலமாகும் என்னை ஏந்திக்கொள்ள மாட்டாயா
என் உயிரே....
நானும் கொஞ்சம் அழுதுவிட்டுப்போகிறேனே உனக்காக
நீ அழும்போது நானும் கொஞ்சம் அழுதுவிட்டுப்போகிறேனே .....
நீ அழுந்தும்போது நான் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் ......
உன் நினைவலைகளில் என்றும் நான் இருக்கும்போது ஆறுதல் சொல்லவும் உன்னைத்தேற்றவும் வழி இல்லாமல் நிர்கதியாய் நான் நிற்கும் போது மனது அழுகிறது என்னையும் அறியாமல் ......
என்னிடம் என் இடம் வந்து விடு உனக்கான மருந்தாய் நான் இருக்கிறேன்...
என்னிடம் வந்துவிடு நீ இழந்ததை எல்லாம் கொடுக்கிறேன்....
என்னிடம் வந்துவிடு.....எல்லாமுமாய் நான் இருக்கிறேன் என் உயிரே....
குட்நைட் என்று மட்டும் சொல்லு .....குட்பை சொல்லாதே என் கண்ணே மனது கொஞ்சம் ஆடிப்போகிறது .......
நானும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன் ..........
நான் இழந்த என் இளமையை எல்லாவற்றையும் அந்த இறைவன் கொடுப்பார் என்றால் இன்னொருமுறை உனக்காக வாழவே விருப்பம் உயிரே...
உன் கைகளால் என்னை கொஞ்சம் அணைத்துக்கொள்....அள்ளிக்கொள்




Thursday, April 16, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 7

ஒவ்வொருமுறையும் நான் உன்னிடம் தோற்றுத்தான் போகிறேன் ......என்னைப்புரியவைக்க முயற்சி செய்து அதில் அப்பட்டமான எனக்கே தெரியாமல் சில கொடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் உன்மனம் புண்ணாகி போகிறது அதற்காக மனம் வருந்துகிறேன்.....

எனக்கான யோசனைகள் எல்லாம் உன்னைச் சுற்றியே வந்திருக்கிறது இதை பல தருணங்களில் உனக்கும் தெரியப்படுத்தி இருக்கிறேன் ஆனாலும்கூட நீ இன்னமும் என்னை தவறாகத்தான் எண்ணி இருக்கிறாய்...

தொலைவது என்பது உனக்கும் எனக்கும் புதிதல்ல நானும் தொலைந்துதான் போனேன் உன்னிடம்...அதேபோல் நீயும் தொலைந்துதான் போனாய்....என்னிடம்

இதில் நானோ நீயோ மாற்றுக்கருத்து கூறவில்லை......அதில் எந்த மாற்றமும் இல்லை.......

இருந்தாலும் நம் இருவருக்கும் நெருடல்கள் நேரிடுகிறது ஏன் என்றுதான் தெரியவில்லை....

கோபத்தில் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகளுக்கு நீ காயப்பட்டு போகிறாய் ......

நானும் தெரியாமல் காயப்படுத்தி விடுகிறேன்...

இருக்கட்டும் இத்துடன் முடியட்டும் இந்த கோப பரிமாற்றங்கள்.....இன்றுமுதல் என்னை புது மனிதனாகப் பார்ப்பாய்.......

Wednesday, April 15, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 6

எவ்வளவுதான் சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத உன்னை என்னவென்று சொல்லுவது.....

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு உள்ளர்த்தம் இருக்கும்போது நான் சொல்லியவைகளில் பாதியாவது இருக்காதா கொஞ்சம் யோசித்துப்பார் உனக்கே புரியும்....

உனக்கான உரிமைகளுக்கு நான் மதிப்பு கொடுக்கும் போது நீ ஏன் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளர்த்தம் கற்பிக்கிறாய்

நம்பிக்கை இல்லாமல் உன்னை சாடவில்லை .....உன்மேல் இருக்கும் நம்பிக்கைதான் என்னை உன்னிடம் ஈர்த்துக்கொண்டு கிட்டத்தில் வைக்க முயற்சி செய்கிறது ......அதற்குத்தான் நான் ஆசையும் படுகிறேன்....

அதனால்தான் இவ்வளவு கேள்விகள்.....கேட்டுக்கொண்டு பதிலை நீ தருவாய் என்று எதிர்பார்க்கிறேன் .....

ஆனால் என் எதிர்பார்ப்புக்கெல்லாம் உன் பதில் என்ன சொல்லியது என்று கேட்டால் குழப்பமான நிலைதான் இன்று வரை நீடிக்கிறது ......

நேரிடையான பதில் எப்போதுதான் தருவாய் .....

உன் தவிப்பும் குழப்பமும் புரிகிறது....அது என்மேல் எழும் நம்பிக்கையின்மையா ....அல்லது சந்தேகப்படுகிறாயா.....

உன் சந்தேகம் நியாயமானதுதான் ஆனால் உன்னையே நம்பி....எல்லாமுமே நீயாகி இருக்கிறாய் என்று என் மனதை திறந்து காட்டியும் உன் சந்தேகம் நிவர்த்தி ஆகவில்லையென்றால் நான் அதற்க்கு என்ன செய்ய முடியும் .....

காலத்தின் கைகளில் அதற்கான பதிலை விட்டு விடுகிறேன் ......இதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை ......சொல்லவும் தோணவில்லை ........

Tuesday, April 14, 2009

நண்பன் ரவிக்கு ஓர் கடிதம்

சென்ற வருடம் இந்நேரம்

நீ உயிருடன் இருந்தாய்.....

பார்க்க முடியாமல் போகட்டும் என்றே

என்னை விட்டு வெகுதூரம் பறந்தாய்...!

உனக்கான கடமையை மறந்து

எதற்காகவும் பந்தப்படாமல்

எங்களின் நினைவுகளைச் சுமந்து

நாங்கள் எளிதில் வரமுடியா இடத்திற்கு

நீ சென்றது ஏனோ என் நண்பனே !

நிரந்தர இடம் இதுவல்ல அதுவென்றே

தோன்றியதோ உனக்கு.....!

இல்லை உன்னைத்தாங்கத்தான் இந்த பூமி

தாய்க்கு மனமில்லாமல் தன் மடியில் உறங்க

வைத்தாளோ என் நண்பனே !

நிரந்தர உறக்கம் எங்களுக்கும் உண்டு

அதற்கு முன்னாள்

அனுபவிக்கும் செயல்கள் ஆயிரம் உண்டு

எங்களுக்குப் பின்னே வரும் சந்ததி நீ

எங்களுக்கு முன்னே பறந்து ஏனோ !

இதுதான் விதியின் சதியோ என் நண்பனே !

உன் உயிர் காக்க வழியில்லாமல்

உன் முகம் பார்க்க முடியாமல்

உன் நினைவுகளைச் சுமந்தே செல்கிறது

எங்களின் பயணம்...

முடியும் தருணத்தில் நானும் உனக்கு

அலை பேசுகிறேன்

உன்னோடு வந்து சேர்ந்து கொள்கிறேன்

அதுவரை எனக்கான இடத்தை

காத்திரு என்னை எதிர்பார்த்திரு!

Saturday, April 11, 2009

நெருப்பு

எத்தனை நாள் ஆகிவிட்டது உன்னைப்பார்த்து .....வெறும் பார்வைகளாலேயே பேசிக்கொண்டு....நெருங்கவும் முடியாமல், பேசவும் முடியாமல் என்ன கொடுமை இது....
என்னக்கான உரிமையைத்தானா பக்கத்தில் இருந்தும் அனுபவிக்க முடியாமல் போகிறது...
இதற்க்காகவா நான் உருகினேன்.....உன்னை என்னவளாக ஏற்றுக்கொண்டேன் .....கேட்டால் எல்லாம் உங்களுக்குத்தான் என்று சமாதானம் சொல்கிறாய் என் நிலை அறியாமல்....
உனக்கு புரியவில்லையா என் வேதனை...உள்ளுக்குள் எரிக்கும் நெருப்பு...என் நெருப்பு மூச்சு....
புரிந்தும் புரியாமல் இருக்கின்றாயா என்றுதான் எனக்கு தெரியவில்லை...
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் என் நெருப்பு மூச்சே என்னை சுட்டெரித்துவிடும் ..கொன்றுவிடும்...
இந்த அவஸ்தையும் கொடுமையும் அனுபவிக்க என்னால் முடியவில்லை அதற்க்கு கொஞ்சம் விஷத்தை கொடுத்து என்னை கொன்றுவிடு உன் கைகளால் அந்த திருப்தியாவது எனக்கு கிடைக்கட்டும்....
நானும் அந்த நிலையில்தான் இருக்கிறேன் என்று சொல்கிறாய்...ஆனால் என் முடிவு .....சொல் !

Thursday, April 9, 2009

புலம்பல்

நான் மனம் விட்டுச் சிரித்தே வெகுநாளாகிறது .....இயந்தரத்தனமாய் எல்லாம் இருக்கிறது.....

காலையில் எழுந்து காலை கடன்களை செய்து ஒரேமாதிரி செய்து செய்து இதுதான் செய்கிறோம் என்றே தோன்றாமல் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது ....

நாட்கள்தான் நகர்கின்றனவே ஒழிய திருப்தி என்பதே என்னவென்று தெரியாமல் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை அதோடு ஆயுளும் ........

நிறைந்த வாழ்வு எங்கிருக்கிறது .....தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் ஒரு முடிவு தெரிந்த பாடில்லை ....

எங்கே பாதை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் .....இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது ......எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் ......கவி கண்ணதாசனுடையவை

உண்மைதான் பயணம் எங்கே என்று தெரிந்து விட்டால் கடவுளை நம்பமாடோம் ...தான்தோன்றித்தனமாக போய்விடும்....அதனால்தான் எல்லாமே மறைபொருள் ரகசியமக்கப்பட்டதோ.....

மனம் மயங்குகிறது .....எதைநோக்கித்தான் என் பயணம் ...இல்லாத ஒன்றை இருக்கிறது என்று நம்பி போகிறேனோ .....

தேடு..என்பது எனக்கிடப்பட்ட கட்டளை ....நான் எதை நோக்கி தேடிக்கொண்டிருக்கிறேன் .....

இலக்கிலாத அம்பு போலே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றேன் ....ஆனால் எங்கே அமைதி எங்கே நிம்மதி...

நெஞ்சுக்கு நிம்மதி அது ஆண்டவன் சந்நிதி .....சொல்லிவிட்டார்கள் ஆனால் மனம் அதில் ஒன்றமாட்டேன் என்கிறதே ஏன் ஏன்?

கேள்விகள்தான் எத்தனை எத்தனை ஆனால் பதில் எங்கே.....

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும் கொட்டிவைத்த குப்பையாக வந்த உடம்பு ......அதற்கு குப்பன் சுப்பன் என்று பெயர் ......

பந்த பாச சேற்றில் வந்த இந்த தேகம் எந்த கங்கை ஆற்றில் கழுவினால் போகும் ....தெரியவில்லை ..

அடிபணிதல் வாழ்க்கையா ......இல்லை ஆர்பரிப்பதுதான் வாழ்க்கை .....சிறகை வெட்டாமல் உயர பறப்பதுதான் வாழ்க்கை ......

மனது குழம்புகிறது......இத்தனை நாளாக தெளிவில்லாமல் என் வாழ்வு சென்றதா .......தெளிவு எது ?

குப்பை மனது மீண்டும் மீண்டும் குப்பையை தேடுகிறது ....கிடைக்கவில்லையென்றால் அழுகிறது ......

அப்படி என்றால் வாழ்வதற்கான ஆதாரம் எது ?

மனம் மறுபடியும் பந்தப்படுகிறது .......உன்னைத்தான் நம்பி இருக்கிறேன் .....சாத்தியம் என்றே தோன்றுகிறது .......

Tuesday, April 7, 2009

குயிலின் குரல்

இது குயிலின் குரல்....ஒன்றாக கூவித்திரிந்த ஒரு பறவையின் குரல்...காத்திருந்தது காத்திருந்து கண்கள் பூத்த ஒரு குயிலின் கண்ணீர் குரல் ....
தேடிவந்த இடம் இதுதானென்று அறியாமல் தனக்கென ஒரு இடத்தைத் தேடித் தேடிக் களைத்தஒரு குயிலின் குரல்...
காத்திருந்த காதலுக்காக சுயநலமில்லாமல் தன்னை கொடுத்த குயிலின் குரல்....
தன்னிடம் இருந்ததை எல்லாம் தனக்கென வைத்துக்கொள்ளாமல் உனக்கென கொடுத்த குயிலின் குரல்..
பறிகொடுத்த நெஞ்சை எங்கேனும் கிடைக்காதா என்று தேடித்திரியும் குயிலின் குரல்..
எங்கேனும் அந்த குயிலை நீங்கள் கண்டாலும் அந்த குயிலின் கதையை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள் .....
எங்கேனும் ஒரு ஒடிந்த மரக்கிளையில் அது மட்டும் தனியாக அமர்ந்து தன் காதல் கீதத்தை இசைத்தபடி இருக்கும் ....
அந்த குயிலின் சோக கீதம் பிடித்தாலும் பிடிக்கவிடாலும் அதன் ராகத்தை இடையூறு செய்யாமல் ஒதுங்கி செல்லுங்கள்...
முடிந்தவரை மனிதர்கள் இல்லா இடத்தில்தான் அது பாடிக்கொண்டிருக்கும் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் ........
ஆற்றுப்படுத்த யாரும் இல்லா விட்டாலும் ஆறுதலை அது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் ....
காயப்பட்ட நெஞ்சங்களை தான் காயப்பட்டு அது தன் மதுர கீதத்தால் ஆற்றிக்கொண்டிருக்கும் ....
கொஞ்சம் நின்றுதான் கேட்டுசெல்லுங்கள் அதன் கதையை .....
எல்லோரையும் போலவே அதற்கும் வந்ததுதான் காதல்...தனக்கென எண்ணாமல் உனக்கென எண்ணும் மனதுதான் அதற்கும் .....
கொஞ்சம் அதன் பாட்டை நீங்கள் உற்றுக்கேட்டால் தெரியும் அதன் பிரேமையை ...
காதலின் ஆழத்தில் தன்னை நுழைத்துக்கொண்ட அந்த குயில் தன் சக துணையைதேடித்தான் காத்துக்கொண்டிருகிறது ....
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் மரத்திற்கு மரம் அது தன் கீதத்தை இசைத்துக்கொண்டிருகிறது....
கொஞ்சம் நீங்களும்தான் கேட்டுப்பாருங்களேன் .......

கடிதம்

வாழ்நாளின் இந்த பிறவியை முடிந்த வரை முடித்துக் கொள்ளவே விருப்பம்...நான் விரும்பியோ விரும்பாமலோ என்னை இந்த ஜென்மம் என்னை துரத்திக்கொண்டிருக்கிறது சூறாவளியாய் ......இன்னும் எத்தனை கஷ்டங்களோ எத்தனை தடுமாற்றங்களோ தெரியவில்லை ......

தடுக்கி விழுந்தவைகள் ஏராளம் ......அன்பு காட்டி என்னை வஞ்சித்த உள்ளங்கள் வாழ்க வளர்க ....அவர்களாவது அவர்களின் எண்ணத்தில் திருப்தி அடையட்டும்....

திருப்தி எதில் வருகிறது ....ஒரு சிலருக்கு செய்வதில் ஒரு சிலருக்கு உபத்திரவம் செய்வதில் .....ஒரு சிலருக்கு நம்ப வைத்து கெடுப்பதில்....இதுமாதிரி ஏராளம்...

இதில் நான் எந்த ரகம் தெரியவில்லை.....நான் அது பற்றி யோசிப்பதுமில்லை ....என்னுடைய கடமையைச் செய்கிறேன் செய்து கொண்டே போகிறேன்....எதுவரைக்கும் தெரியவில்லை .....ஆனால் இந்த உலகத்திற்க்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்....

அதற்கான சக்தியை இறைவா எனக்கு கொடு என்று அனுதினமும் வேண்டிக்கொள்கிறேன் .....நீண்ட ஆயுளை கொடுத்து என்னை சுயநலம் மிகுந்தவனாக மாற்றிவிடாதே என்றுதான் வேண்டுகிறேன் .......

மாறுபட்ட அணுகுமுறைகளின் வெளிப்பாடு என்னைக்கொஞ்சம் புரட்டிப்போடுகிறது.....இருந்தாலும் சமாளித்துக்கொள்கிறேன் ...

ஆனால் வஞ்சனை செய்பவரைக்கண்டாலே என்னை அறியாமல் கோபம் வருகிறது ஆனாலும் அனுசரித்தே போகிறேன் முடிந்தவரை ....

அவர்களை ஒதுக்கவேண்டும் ...இல்லையேல் ஒதுங்கவேண்டும் ....நான் ஒதுங்கிக்கொள்கிறேன் ......

அவர்கள் தந்த அதிர்ச்சி என்னை தாக்கி கொண்டே இருக்கிறது ...தாங்கிக்கொள்ள பழகுகிறேன் ......

சுயநலம் எல்லாமே .....ஒன்றின் மேல் ஒன்று சுயநலம் ....எதைக்கொண்டு போகிறார்கள் இவர்கள் .....வாழ்வின் அந்திம காலத்தில் எல்லாம் புரிந்து என்ன பயன் ....இழந்த காலம் திரும்ப வருமா ......

என்னையும் சேர்த்துதான் ஆனால் நான் சற்று நிதானிக்கவே விரும்புகிறேன் .....

உலகின் பார்வைக்கு ஒன்றும் அறியாமல் போகவே விருப்பம்...இறைவன் மனது வைக்கவேண்டும் .....

Thursday, April 2, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 5

என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் வீணடித்து விட்டதாகவே தோன்றுகிறது .... என் வாழ்க்கையில் இழந்தவை ஏராளம் ஏராளம்......
இனிமேலும் இழக்க விரும்பவில்லை.....உன் அன்பை, உன் ஸ்பரிசத்தை, உன் காதலை, உன் நெருக்கத்தை....உன்னை முழுதுமாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.....
என் கை பிடித்து வாழ்நாள் முழுவதும் வலம் வருவாயா என்னவளே! உனக்காக நெஞ்சு நிறைய அன்புடனும், பாசமுடனும், உன்னுடைய பாசத்திருக்குரியவன் காத்துக்கொண்டிருக்கிறான்.....
நான் அமைதியான நீரோடை என்றால் நீ மென்மையான வருடும் தென்றல்!
நான் படரும் கொடி என்றால் நீ தலைகோதும் காற்று!
கொந்தளிப்பில்லா நீரோடையில் மென்மையான தென்றல் வீசினால் நீரோடை நீர் நிலையை வருடும்போது லேசாக சிலிர்த்துக்கொள்ளுமே அதே நிலையை நான் உணர்கிறேன்....உன் பெயரைச் சொல்லும்போதெல்லாம் , உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ......
நிலவின் குளுமையாய் உன்னை அள்ளிக்கொள்ளும் அதேநேரம் உன்னிடத்தில் தீயின் வெப்பத்தையும் உணர்ந்திருக்கிறேன் ..வழி தவறும் ஆடாய் நான் இருந்த போது .....
இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்ள என்றுமே நீ தயங்கியது இல்லை ...அது நான் பெற்ற வரம் .....எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்....!
அதனால்தான் நீ எனக்கு கிடைத்ததை கொண்டாடுகிறேன் கூத்தாடுகிறேன் ....
சிலநேரம் என்னை அறியாமல் உணர்ச்சிவசபடுகிறேன்.....தவறாக எண்ணாதே என் உயிரே .....









Wednesday, April 1, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 4

வெறும் கனவுகளைக்காட்டி உன்னை ஏமாற்ற விரும்பவில்லை.....அது என் மனமானாலும்,உடலானாலும் ....நினைவுகளைவிட நிகழ்வுகளையே நான் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறேன்....உனக்காகத்தான்..
அதனாலதான் எந்த பிரச்சனையையும் நான் கூச்சமில்லாமல் அணுகமுடிகிறது
நான் வாழ்ந்த வாழ்க்கை முறை என்னை கட்டிப்போட்டதுதான் ஆனால் என்னால் விசாலமாய் யோசிக்க முடிந்தது உன்னை பார்த்த பின்புதான்....
ஆனாலும் சில வேளைகளில் என்னால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை தாண்டி யோசிக்க முடிவதில்லை....ஆனாலும் மௌனத்தினால் அதை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன்...
இருக்கட்டும் பிரிதொருநாளில் என்னை புரிந்து கொள்வாய் என்றே நினைக்கிறேன்....
என்மேல் நானே வெறுப்புக்கொண்டு வாழ்வைச் சபித்துக்கொண்டிருந்த வேளையில் தென்றலாய் உன்வரவு இருந்தது....
இடையில் உனக்கும் எனக்கும் அடித் புயல்கள் ஏராளம்....ஆனாலும்கூட நம் காதலின் அடித்தளம் அழியவில்லை அதுவே நம் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்...

இதயபரிமாற்றங்களை இன்னும் சில வருடங்கள் முன்பே தெரிந்திருந்தால் அப்போதே உன்னைச் சிறைஎடுதிருப்பேன்.....

அதனால்தான் வெளிப்பார்வை பார்க்கும் சமூகத்திற்கு நம் பயபடவேண்டி இருக்கிறது....

உனக்கும் எனக்கும் தெரியும் நம் கலப்பு தூய்மையானது, உண்மையானது என்று...

ஆனாலும் பார்க்கும் பார்வைகள் வேறாகும்போது சமூகத்தின் பார்வைக்கு பயப்பட வேண்டி இருக்கிறது....

நான் இருக்கும் இடத்தில் வேறு யாரோ உன்னுடன் உனக்கு இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது உன்னுடன் அவர்கள் இருக்கும் நிழல்படத்தைக்கூட நான் விரும்பவில்லை உயிரே....

இருக்கட்டும் உன் மனது என்னிடம்தானே இருக்கிறது அதை பத்திரமாய் என் இதயச் சிறையில் வைத்துப் பூட்டிவிடுகிறேன்.....

உன் இதயம் எனக்கு மட்டும்தானே சொந்தம்....




மண முறிவு

உனக்கும் எனக்கும்
முன் பழக்கம்
அதனால்தான் இத்தனை
குழப்பம்....
****
தெளிந்த நீரோடை நம் வாழ்வு
இறைக்கோ அதை ஆட்டிவைக்கும் விளையாட்டு
எனை மாட்டி வைத்து பார்த்தாய் வேடிக்கை
எவ்வளவு தூரம் பயணம் இந்த வாடிக்கை
****
மலரின் மணமெல்லாம் மனதால் நிறையும்
நீயும் நானும் மலரானோம்
வாழ்க்கைத் தோட்டத்தில் மலர்ந்த
பூக்களைப் பறித்து தொடுத்ததில்
சிறு சிக்கல்
நான் நாரா இல்லை நீ மணமா
****
வெளியில் சிரித்து
மனதில் அழுகிறேன்
உனக்கு
மனதில் சிரித்து
வெளியில் அழுகிறாய்
பொருத்தமான வேஷம்
நம் இருவருக்கும்
பொருந்தவில்லை நேசம்.
****
இடைவெளிகள் இருந்தாலும்
உனக்கான கடமையை மறக்கவில்லை
என்றாவது ஒரு நாள் உன்னை உணர்வாய்
உணர்வில் நீ ஒன்றும்போது
நீயும் நானும் வேறாக....
தெரியவில்லை அதைத் தவிர....


ஒருதலைக்காதல்

கண்கட்டி நீ என்னை
தள்ளிவிட்ட போதும்
உன் சுவாசம் என்னை
உன்னிடம் நோக்கி ஈர்த்தது
கைகொட்டிசிரிக்கின்றாய்
அந்த புன்னைமரத்து பூப்போலே
இதழ் கடித்து சிவக்கின்றாய்
இந்த வெண்தாமரை நிழல் போலே
****
நினைவுகள் என்னை
நினைத்தபோதும்
நிகழ்வுகள்
எனக்காக தடுத்தது
என்னிடம் உன்னை பிரித்தது
மரத்தடி நிழலே
சாட்சி
நம் விளையாட்டுக்கெல்லாம்
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
நான் மரத்தடி நிழலைத் தொடுகிறேன்
உன் சுவாசக்காற்றையே உணர்கிறேன்
****
நினைவிருகிறதா
நீ கொடுத்த கடைசி முத்தம்
என் கைகளில்
நினைவிருகிறதா
நீ சிந்திய அந்த கண்ணீர்த்துளி
பனியாக மாறி
என்முகம் பார்த்தது
நினைவிருக்கிறது நீ
நின்ற புல்லின் மடி
இளம்சூடாய் வருடுவதை
நினைவிருக்கிறது
எனக்காக நீ கொடுத்த
அறையும் கூட !
****
காதலை படிக்க
நான் காதலை பார்க்க வேண்டி வந்தது
அனுபவம் பெற
உன் மங்களமான முகத்தை
ரசிக்க வேண்டி வந்தது
தோல்வி காண
நீ உறவோடு ஒத்துபோனது
எல்லாம் எல்லாமாய்
நான் மட்டும் தனிமையில்
மரத்தடியே
முறிந்த கிளை போலே .......







விரக்தி

நான் போகும் பாதையிலே
நாட்டவைத்த கள்ளிச்செடி!
உச்சந்தலை நோகுதடி !
உள்ளுக்குள்ளே வேகுதடி !
நான் பார்த்த மரமெல்லாம் !
பூப்பூத்து காய்க்கும்போது !
எனக்குன்னு வச்ச மரம் !
வெட்ட மரமா போனதென்ன !
வெக்கையாலே நோவதென்ன !
உன்னசொல்லிக் குத்தமில்ல !
ஊர்வம்பு குத்துதடி!
காஞ்ச மறந்தான் எப்போதுமே !
கல்லடி படுமடி
கண்ணான கண்ணு இது
என் கண்ணுக்குள்ளே பொத்திவச்சேன்
காஞ்ச முள்ளை ஊசியாக்கி
குத்திப்புட்டு போனதென்ன
என் உள்ளமெல்லாம் நோவதென்ன!