Friday, July 17, 2009

நினைவலை

நீ என் கைப்பிடித்துச் சொன்ன
விஷயங்கள் நினைவில் அலைமோத
உனக்கான வாசனையை விட்டுச்சென்ற
என் கையை மறுபடி ஒருமுறை
தொட்டுச் செல்லமட்டாயா.....!
மறுபடியும் கொஞ்சம்
உயிர் வாழ்ந்து கொள்கிறேனே....
உன் நினைவாக....

ஏக்கம்

முடிவில்லாமல் நீளும்

இரவுகள்....

உணர்வுகளோடு நிதமும்

போராட்டம்.....

அருகாமைக்காக ஏங்கும்

உன் நினைவலைகள்....

மழை நாளின் முடிவில்

அந்த புன்னைமர இலை

சிந்தும் பனித்துளி .....

தயங்காமல் எடுத்துச் சொல்லும்

என் ஏக்கத்தை.....

Monday, July 6, 2009

தவிப்பு

எப்படி சொல்வது என்று தெரியவில்லை......தெரியாமலேயே போகட்டும் என் நிலை. அவளுக்கு நான் தப்பானவனாகவே இருந்துவிட்டுபோகிறேன்....அந்தமட்டும் அந்த திருப்தி அவனுக்கு போதும்...

இனிமேல் அவனுக்காக எதுவும் அவள் செய்யபோவதில்லை. ஏனென்றால் அவளின் மனது அவனுக்காக யோசிக்கப்போவது இல்லை.....அன்பையும், பாசத்தையும் கூட பரிமாறிக்கொள்ள போவதில்லை....பாவம் அவளும் எவ்வளவு நாள்தான் அவனோடு போராடுவாள்.....அவளாவது நன்றாக இருக்கட்டும்....

அவனின் மனது அவளுக்காக ஏங்கி ஏங்கி துடித்துக்கொண்டிருக்கிறது .....அவனுக்கு உரிமை உள்ள இடத்தில் ஆசை இல்லை ....ஆசை உள்ள அவளிடத்தில் உரிமை இல்லை...அவளின் சூழ்நிலை அவளை மௌனமாக்கி அவனை கைதிஆக்கி வேடிக்கை பார்க்கிறது....

அவனின் தேவை அவள் மட்டும்தான்.....அவனின் சேவை அவளுக்கு மட்டும்தான் ...அவனின் ஆசை அவளோடு மட்டும்தான் .....அவனின் பரிமாற்றம் அவளோடு மட்டும்தான் ....

ஆனால் அவளின் தேவை அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது ....அவளின் பரிமாற்றம் அவர்களுக்கு தேவையாய் இருக்கிறது ....அவளும் பந்தப்பட்டு நிற்கிறாள் ........ஏன் இந்த பாடு.......அவன் கண்களில் நீர் வழிகின்றது....மனது துடிக்கின்றது ....மாற்றிக்கொள்ள முயல்கிறான்.....

எப்படி இருக்கப் போகிறான்.....தெரியவில்லை....இருந்தாலும் அவளுக்கு அந்த சிரமத்தை கொடுக்க அவன் விரும்பவில்லை....அவளுக்கு அவன் தப்பானவனாகவே இருந்துவிட்டுப் போகிறான்......

அவன் வீட்டு தோட்டத்தில் அவர்களின் மல்லிகைச் செடியை உயிர்கொடுத்து வளர்த்தான்....மனதுக்குள் பொத்திவைத்து பூஜித்தான்....அவனுக்குத்தான் வாசம்தரும் அந்த மல்லிகை என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.....

ஆனாலும் அந்த மல்லிகை அவர்களுக்கும் பந்தப்பட்டு வாசம் கொடுக்கிறது.....கொடுக்கும் என்று தெரிந்த பிறகு அவன் அந்த மல்லிகைக்காக அழுகிறான்....நீ யார் உரிமை கொண்டாட தோட்டக்காரன் கேட்கிறான்...அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை....உணமையைச் சொன்ன அந்த தோட்டக்காரன்முன் அவன் செய்வதறியாது தவிக்கிறான்.....

அவனுக்கே அந்த மல்லிகைச்செடி சொந்தம் என்று நினைத்துவிட்டான்....அதனால் அவன் தோட்டத்தில் பூத்திருந்த மற்ற செடிகளை அவன் காபந்து செய்தானே தவிர உயிராய் நினைத்தது அந்த ஒரு செடியைத்தான் .....அதுவும் அதன் சொந்தக்காரன் கேட்பான் என்று எதிர்பார்த்தே அவன் உயிரைக்கொடுத்து அதை வளர்த்தான் .....ஆனால் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை......

அவன் அழுவது அந்த மல்லிகைச் செடிக்காகவா....இல்லை அதன் சொந்தக்காரனுக்காகவா....இல்லை அவனுக்காகவா....இல்லை அந்த உயிருக்காகவா ......எதற்காக அவன் அழுவது....கண்கள் வற்றிப்போகிறது....

நடப்பதெல்லாம் கனவாக இருக்கக்கூடாதா....அவன் கண்கள் கடைசி நேர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது......தோட்டக்காரனை பரிதாபமாய் அவன் பார்க்கிறான்.....தோட்டக்காரனின் எண்ணம் மல்லிகைச் செடிமேலேயே இருக்கிறது.....அவனின் வேண்டுதல் எதுவும் தோட்டக்காரன் காதில் விழவில்லை.....

பாவம் மல்லிகை......உரிமைக்காக போராடுவதா...உறவுக்காக போராடுவதா.....அது தவிக்கிறது....

ஐயோ இது என்ன கனவு அலறியபடி அவன் படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறான் உடம்பு நடுங்குகிறது.....மனது பதைக்கிறது....

மௌனமாகிறான்.....அவளின் கேள்வி அவனை துளைக்கிறது....அவனால் சொல்ல முடியவில்லை .....சொல்லவும் தெரியவில்லை....அவனின் உயிர் அவனுக்கில்லையா?

Wednesday, July 1, 2009

சாஸ்வதம்

அவனுக்குத்தெரியும் அவளின் ரணம்..... இருந்தாலும் அவள் அதை சொல்லி இருக்கக்கூடாது.... தெரியாமல் சொல்லிவிட்ட வார்த்தைகளினால் எவ்வளவு முரண்பாடு என்று அவளுக்கும் அவனுக்கும் இப்போது தெரிந்திருக்கும்......
அவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்காக பார்த்து பார்த்து செய்யும் பட்சத்தில் ஏதோ ஒன்று அவளின்மூலம் வெளிப்பட்டு மனது ரணமாகிறது அவளுக்கும் அவனுக்கும்....
எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருந்து என்ன பயன். பார்வையாளனாய் ஒரு விமர்சகனாய் அவளின் வாழ்க்கைக்கு இருக்க அவன் பிரியப்படவில்லை....அவளுக்கு உணர்வாய் உறவாய் உயிராய் இருக்கவே அவனுக்கு பிரியம்.....அதைத்தான் அவனும் விரும்புகிறான் ....
அவன் கேட்பது அவளின் பாதியாய் தான் மாற....அவளுக்கு புரியுமா அவனின் தவிப்பு....எதற்காக துடித்துக்கொண்டிருக்கிறது அவனின் இதயம் என்று....
தெரியாமல் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வளவு சோகங்களை போர்த்திக்கொள்கிறது என்பது அவளுக்கு தெரியாதா என்ன?
இருந்தும் இடறல்கள் வந்து விடுகிறது அவளுக்கும், அவனுக்கும் ....புரியாத தருணங்கள்....தொலைந்து போன நாட்களை அவன் சாட்சிக்கு அழைக்கவில்லை ...அவளுக்கு அவனின் சாஸ்வதம் புரிந்தால் சரி ....